1951-ஆம் ஆண்டுக்கான நோபல் இலக்கியப் பரிசு பெற்ற நாவல் Barabbas. இதை ஸ்வீடிஷ் ஆசிரியர் பெர் லாகர்குவிஸ்ட் (Pär Lagerkvist) 1950-ஆம் ஆண்டில் எழுதியுள்ளார். மூல ஆசிரியரின் அனுமதியுடன் இதனை 1956-ஆம் ஆண்டில் தமிழில் க.நா.சு. மொழிபெயர்த்துள்ளார்.
பல இடங்களில் நின்று நின்று சிந்தித்துப்படிக்கவேண்டிய நாவல் இது. பக்கங்கள் அதிகமில்லாவிட்டாலும், வைத்துப் போற்றி நிதானமாகப் படித்து அனுபவிக்கவேண்டி௰ய நாவல். ஒருதரம் லாகர்குவிஸ்டின் பாரபாஸை அறிந்து கொண்டவர்கள் அவனை மறக்கவே முடியாது என்பது நிச்சயம், என முன்னுரையில் ஆசிரியர் சொல்கிறார்.
Pär Lagerkvist (1891–1974) ஸ்வீடிஷ் எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர். 1951-ஆம் ஆண்டுக்கான நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர். ஒரு நாடக ஆசிரியராக, லாகர்க்விஸ்ட் மிகவும் பல்துறை திறன் கொண்டவராக இருந்துள்ளார்.
லாகர்க்விஸ்ட், குறிப்பாக அவரது மூன்று முக்கியமான நாவல்களான, The Dwarf (1944), Barabbas (1950), மற்றும் Sibyllan (1956) ஆகியவற்றில், கடவுளுடனான மனிதனின் உறவின் சிக்கலை அதிகளவில் கையாண்டுள்ளார்.
”நம்பிக்கை இல்லாத ஒரு விசுவாசியின்” கதையான பராபாஸ், அவரது முதல் உண்மையான சர்வதேச வெற்றியாகும்.
க.நா.சுப்ரமணியம் (கந்தாடை நாராயணசாமி ஐயர் சுப்ரமணியம், க.நா.சு) (ஜனவரி 31, 1912 - டிசம்பர் 16, 1988) நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இதழாளர். நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான சிந்தனைப்போக்கு க.நா.சுப்ரமணியம் மரபு எனப்படுகிறது.
Read hereக.நா,சுப்ரமணியத்தின் பங்களிப்புகளில் முதன்மையானது அவருடைய மொழிபெயர்ப்புகளே என்று சுந்தர ராமசாமி ‘க.நா.சு. நட்பும் மதிப்பும்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார். அவர் அன்று புகழ்பெற்றிருந்த அமெரிக்கப் படைப்பாளிகளை மொழியாக்கம் செய்யவில்லை. அதிகம் அறியப்படாத ஐரோப்பியப் படைப்பாளிகளான செல்மா லாகர்லெஃப், பார்லாகர் க்விஸ்ட் போன்றவர்களை தமிழுக்கு கொண்டுவந்தார். அதன் வழியாக அவர் உருவாக்க விரும்பிய இலக்கிய அழகியல் என்ன என்று காட்டினார். க.நா.சுப்ரமணியம் மொழியாக்கங்கள் செய்தபடியே இருந்தார். நோபல் பரிசு பெற்ற நாவல்களின் மொழிபெயர்ப்புகள், ஐரோப்பிய, அமெரிக்க, உலகச் சிறுகதைகள் அவரால் மொழியாக்கம் செய்யப்பட்டன. ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் கிரேன், ஜாக் லண்டன், இப்சன் போன்ற வெவ்வேறு வகைப்பட்ட படைப்பாளிகளை அவர் மொழியாக்கம் செய்தார். ஏராளமான நாவல்களின் சுருக்கங்களை எழுதியிருக்கிறார். - தமிழ் விக்கி